Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் - 5 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி :

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில், ஐந்து தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதாஜீவன், மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் (50,310) வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஏற்கெனவே 2006, 2016 தேர்தல்களில் கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தற்போது 3-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.

திருச்செந்தூர் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இவர் தொடர்ந்து

6-வது முறையாக இந்த தொகுதியில் வென்றுள்ளார். 2001 மற்றும் 2006 தேர்தல்களில் அதிமுக சார்பில் வென்ற இவர், 2009 இடைத்தேர்தல் மற்றும் 2011, 2016 தேர்தல்களில் வென்றுள்ளார்.

திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இதேபோல ஓட்டப்பிடாரம் தொகுதியையும் திமுக தக்க வைத்துள்ளது. கடந்த 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.சி.சண்முகையா, 2-வது முறையாக இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும் இம்முறை கூடுதலாக விளாத்திகுளம் தொகுதியிலும் திமுக வென்றுள்ளது. அதிமுக வசமிருந்த இத்தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜி.வி.மார்க்கண்டேயன் வென்றுள்ளார். இவர் ஏற்கெனவே 2011 தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று, 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது அதிமுகவில் இருந்து விலகி, திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வென்றுள்ளார்.

வைகுண்டம் தொகுதியை அதிமுகவிடம் இருந்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி செ.அமிர்தராஜ் வென்றுள்ளார். இவர் முதல்முறையாக தேர்தலில் களம் கண்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். இவர் இந்த தொகுதியில் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த ஊர்வசி செல்வராஜின் மகன் ஆவார்.

2 இடங்களை இழந்த அதிமுக

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை விளாத்திகுளம் மற்றும் வைகுண்டம் ஆகிய இரு தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது.

விளாத்திகுளம் தொகுதியை திமுகவிடமும், வைகுண்டம் தொகுதியை காங்கிரஸ் கட்சியிடமும் அதிமுக இழந்துள்ளது. வைகுண்டம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தோல்வியடைந்துள்ளார். அதேபோல் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.சின்னப்பன் தோல்வியை தழுவியுள்ளார்.

மாவட்டத்தில் கோவில்பட்டி தொகுதியை மட்டுமே அதிமுக தக்க வைத்துள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட கடம்பூர் செ.ராஜூ வெற்றி பெற்றார்.

ஏற்கெனவே 2011, 2016 தேர்தல்களில் இதே தொகுதியில் வெற்றிபெற்ற கடம்பூர் ராஜூ, தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தொகுதியில் வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x