Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

திருவண்ணாமலையில் எ.வ.வேலு ‘ஹாட்ரிக்’ வெற்றி :

தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுகவில் அரசியல் பயணத்தை தொடங்கிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுகவில் அசைக்க முடியாத சக்திகளில் ஒன்றாக வலம் வருகிறார். கடந்த 1984-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி கணக்கை தொடங்கினார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி சார்பில், 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் பின்னர், பிளவுப்பட்டிருந்த அதிமுக ஒன்றானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் அதிமுக செயல்பட்டபோது, ஜானகி அணியில் இருந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அதில், எ.வ.வேலுவும் தப்பவில்லை. இதனால், கடந்த 1991-ல் நடை பெற்ற தேர்தலில் புறக்கணிக்கப் பட்டார்.

இதையடுத்து, தனது எதிர்கால அரசியலை கணக்கிட்டு, திமுகவில் இணைந்த அவர், தண்டராம்பட்டு தொகுதியில் 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு மிக நெருக்க மானவர்களில் ஒருவராக திகழ்ந்த எ.வ.வேலு, திமுக அமைச்சர வையில் உணவுத் துறை அமைச் சராக பதவி வகித்தார். அதன்பிறகு அவரது அரசியல் செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் தொகுதி சீரமைப்புக்குப் பிறகு, தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2016-ல் நடைபெற்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வீழ்த்தினார்.

இதன் தொடர்ச்சியாக, தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் 3-வது முறையாக களம் கண்டவர், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜகவை 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள எ.வ.வேலு, புதிய அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர், தமிழக சட்டப்பேரவைக்குள் 6-வது முறையாக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x