Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

தேர்தல் வியூகர் பணியில் இருந்து - பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல் :

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலசட்டப்பேரவைத் தேர்தல்களில், தமிழகத்தில் திமுகவுக்காகவும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்காகவும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தது. இதில் இரண்டு கட்சிகளுமே அமோக வெற்றி பெற்றிருப்பதால் அனைவரின் கவனமும் பிரசாந்த் கிஷோர் மீது திரும்பியுள்ளது. இந்த சூழலில், தேர்தல் வியூகர் பணியில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் திடீரென அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தேர்தல் வியூகராக 6 – 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அந்த சமயங்களில் பல சவால்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், மேற்கு வங்கதேர்தலில் இருந்ததைப் போன்ற சவால்களை இதுவரை நான் சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதையுமே மத ரீதியாக பாஜக பிளவுப்படுத்திவிட்டது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையமோ கை்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது.

எங்களின் (திரிணமூல் காங்கிரஸ்) பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவதிலும் பல சிக்கல்கள் எழுந்தன. இவற்றையெல்லாம் கடந்துதான் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் மிகவும் சவாலாக நான் கருதிய விஷயம், முதல்வர் மம்தா பானர்ஜியின் காலில் காயம் ஏற்பட்டதுதான். ஏனெனில், அவரை மையப்படுத்தியே நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களையும், வியூகங்களையும் அமைத்திருந்தோம். ஆனால், சக்கர நாற்காலியில் அவர் வலம் வந்து மக்களின் இதயத்தை வென்றுவிட்டார். வங்க மக்களிடம் மம்தா எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்த தருணம் அது.

பிரதமர் நரேந்திர மோடியின் புகழை மட்டும் வைத்துக் கொண்டு அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது என்பது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

தேர்தல் வியூகராக எனது பணியை போதுமான அளவுக்கு செய்துவிட்டதாக கருதுகிறேன். இனியும் இதனை தொடர விரும்பவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. வாழ்க்கையில் வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதனால் தேர்தல் வியூகர் பணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

முன்னதாக, மீண்டும் அரசியலில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “நான் அரசியலில் தோல்வி அடைந்தவன். எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இனிதான் யோசிக்க வேண்டும்" என பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x