Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

ஆளும் வாய்ப்பை 6-வது முறையாக - திமுகவிடம் ஒப்படைத்த மக்களுக்கு நன்றி : இனி தமிழகம் வெல்லும் என மு.க.ஸ்டாலின் உறுதி

‘‘தமிழகத்தை ஆளும் வாய்ப்பை 6-வது முறையாக திமுகவிடம் ஒப்படைத்துள்ள தமிழக மக்களுக்காக உழைப்பேன். இனி தமிழகம் வெல்லும்’’ என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’என்றார் அண்ணா. ‘ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்’ என்றார் கருணாநிதி. தமிழ்மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திமுகவுக்கு 6-வது முறையாக ஆட்சியை செலுத்த கட்டளையிட்டுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவை திமுக கூட்டணிக்கு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 5 முறை ஆட்சி செலுத்திய கருணாநிதி வாழ்ந்த காலத்திலேயே திமுக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்றுநினைத்தோம். ஆனால், காலம் முந்திக்கொண்டு விட்டது. அந்தக் கனவைநிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்துக்கு இயக்க ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் உழைத்தநமது உழைப்புக்கு கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதை பாதுகாப்பேன். நமது உழைப்புக்கு தரப்பட்ட அங்கீகாரமாக இதை நினைக்கிறேன்.

எத்தனை சோதனைகள், வேதனைகள், பழிச்சொற்கள், அவதூறுகள் என்று திமுக மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்த தமிழக மக்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.உங்களுக்கு உண்மையாக இருப்பேன். உங்களுக்காக உழைப்பேன்.என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்.

இந்த வெற்றிக்கு உழைத்தகோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாக திமுகவோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

ஜனநாயக போர்க்களத்தில் திமுககூட்டணி அடைந்த வெற்றியை தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னை தொடர்புகொண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் அகில இந்திய தலைவர்கள், மாநில முதல்வர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

அமையப் போகும் திமுக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். திமுக வென்றது. அதைத் தமிழகம் இன்று சொன்னது. இனி தமிழகம் வெல்லும். அதை நாளைய தமிழகம் சொல்லும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x