Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து , திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் வாழ்த்துகள்.

தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார்:உண்மையிலேயே இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி: சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள். தமிழகமக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு உங்களின் சீரிய தலைமையின்கீழ் பயணம் செய்வோம் என்பதை நாம் நிரூபிப்போம்.

பிஹார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்: சட்டப்பேரவை தேர்தலில்பெற்றுள்ள பிரம்மாண்டமான வெற்றிக்கு வாழ்த்துகள், தங்களின் தந்தை கருணாநிதியின் சமூக நீதிக் கொள்கையை தாங்களும் முன்னெடுத்துச் செல்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்: சட்டப்பேரவைதேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல் வீரர்களுக்கும் வாழ்த்துகள். உங்களின் திறமையான தலைமையின்கீழ் செயல்படுத்தப்படும் மக்கள்நலத் திட்டங்களுக்காக தமிழக மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லிமுதல்வருமான கெஜ்ரிவால்: சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துகிறேன்.

ரஜினிகாந்த்: சட்டப்பேரவைத் தேர்தலின் கடும் போட்டியில், திறம்படஅயராது உழைத்து, வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து, அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

ஈஷா அறக்கட்டளை தலைவர் சத்குரு: மக்களின் ஆதரவுடன் அரசமைக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் வாழ்த்துகள்.தற்போதைய சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ளவும், தமிழ் பாரம்பரியத்தின் வளத்தை மீட்டெடுக்கவும் புதிய நிர்வாகத்துக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துக்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். வெற்றிகள் தொடரட்டும், பணிகள் தொடங்கட்டும், புதிய வரலாறு படைக்கட்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரோனாதொற்று சூழல், கடுமையான பொருளாதாரநெருக்கடி, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற சவால்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலரப் போகிற புதிய ஆட்சி மக்கள் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு வாழ்த்துகள்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நல்வாழ்த்துகள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: பெருவெற்றி பெற்றுள்ளமு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமானபாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என்னைத் தேர்ந்தெடுத்த பாபநாசம் தொகுதி மக்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் முடிவு குறித்து அமித் ஷா கருத்து

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ட்விட்டரில் தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘5 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக மக்களுக்கு முழு மனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு, பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர, சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x