Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

மேற்கு வங்க மாநிலத்தில்3-வது முறையாக திரிணமூல் ஆட்சி :

மேற்குவங்க தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சம்ஜர் கன்ஞ் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், ஜாங்கிபூர் தொகுதி ஆர்எஸ்பி வேட்பாளரும் உயிரிழந் ததால் 2 தொகுதிகளிலும் 16-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

ஆரம்பம் முதலே ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இடதுசாரிகள்-காங்கிரஸ்-இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை கூட்டணி அமைத்து 3-வது அணியாக போட்டியிட்டன.

ஆளும் திரிணமூல் சார்பில் 291 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. எதிரணியில் பாஜக 293 தொகுதிகளில் களம் இறங்கியது. கூட்டணி கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டது. மூன்றாவது அணியில் இடதுசாரி கட்சிகள் 165, காங்கிரஸ் 92, இந்திய மதச்சார்பற்ற முன்னணி 37 தொகுதிகளில் போட்டியிட்டன.

மார்ச் 27 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிணமூல் காங்கிரஸ் 214 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. எனினும் நந்திகிராம் தொகுதியில் முதல்வரும் அந்த கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 76 இடங்களை கைப்பற்றியது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள், சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். எனினும் அவரது மகன் சுப்ரங்ஷுராய், பிஜ்பூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். திரிணமூலில் இருந்து பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலானோர் தோல்வியை தழுவினர்.

இடதுசாரி, காங்கிரஸ், இந்திய மதச்சார்பற்ற முன்னணி கூட்டணிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு 32 எம்எல்ஏக்கள் இருந்தனர். மேற்குவங்கத்தில் 34 ஆண்டு கள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளுக்கு தற்போது ஓரிடம்கூட கிடைக்காதது பேரதிர்ச்சியாக அமைந் துள்ளது.

கடந்த 2011 தேர்தலில் திரிணமூல், காங்கிரஸ் கூட்டணி 228 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2016 தேர்தலில் திரிணமூல் தனித்துப் போட்டியிட்டு 211 தொகுதிகளைக் கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக 214 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

வெற்றி பெற்ற மம்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x