Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

அனைவரது பார்வையையும் திருப்பிய கோவை தெற்கு தொகுதி : நீண்ட இழுபறிக்குப் பின்னர் தோல்வியைத் தழுவினார் கமல்ஹாசன்

வாக்கு எண்ணிக்கையில் நட்சத்திர தொகுதியான கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யமும், பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் முடிவு அறிய தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.,

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான, கோவை தெற்கு தொகுதியில் திமுக – அதிமுக நேரடியாக மோதவில்லை. ஆனாலும், தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாக கோவை தெற்கு தொகுதி இந்த தேர்தலில் இருந்தது. இத்தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் என பெரும்புள்ளிகள் களமிறங்கியதுதான்.

அனைவரது பார்வையையும் திருப்பிய, தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றான கோவை தெற்கு தொகுதியின் முடிவை மாநிலமே எதிர் நோக்கியிருந்தது. அதற்கேற்ப, நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்றில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.

முதல் சில சுற்றுகளில் மநீம வேட்பாளர் கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையே மட்டுமே போட்டியிருந்தது.

ஆனால், சுற்றுகள் செல்லச் செல்ல கமல்ஹாசனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே போட்டி திசை மாறியது.

ஒவ்வொரு சுற்றிலும் சராசரியாக 2 ஆயிரம் வாக்குகள் கமல்ஹாசன் முன்னிலை பெற்று வந்தார். 23-வது சுற்றில் வானதி சீனிவாசன் 45,952, கமல்ஹாசன் 45,042 வாக்குகளும், 24-வது சுற்றில் வானதி சீனிவாசன் 48,270 , கமல்ஹாசன் 47,156 வாக்குகளும் பெற்றனர்.

26-வது சுற்று முடிவில் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

நட்சத்திரத் தொகுதியான கோவை தெற்கில் மநீம, பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் பரபரப்புடன் தேர்தல் முடிவை எதிர்நோக்கி இரவிலும் அந்தப் பகுதியில் காத்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x