Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

சேலம் மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் - 2,000 போலீஸார் பாதுகாப்பு; வாக்கு எண்ணும் பணியில் 594 பேர் :

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று (2-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் பணியில் 594 பேர் ஈடுபடவுள்ளன்ர்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தமுள்ள 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்களில், 23 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி மற்றும் வீரபாண்டி தொகுதியில் தலா 85.64 சதவீதம் வாக்குப்பதிவானது. குறைந்தபட்சமாக சேலம் மேற்குத் தொகுதியில் 71.81 சதவீதம் வாக்குப்பதிவானது.

சேலம் வடக்குத் தொகுதியில் 72.14 சதவீதமும், சங்ககிரியில் 83.71 சதவீதமும், ஓமலூரில் 83.28 சதவீதமும், ஏற்காடு (தனி) 83.09 சதவீதமும், ஆத்தூர் (தனி) 77.26 சதவீதமும், கெங்கவல்லி (தனி) 77.11 சதவீதமும், சேலம் தெற்கு 76 சதவீதமும், மேட்டூர் 75.01 சதவீதமும் வாக்குகள் பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 71.16 சதவீதம் வாக்குகள் பதிவானது.

கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தலைவாசல் அடுத்த மாருதி பாலிடெக்னிக் கல்லூரியிலும், சேலம் தெற்கு, ஏற்காடு (எஸ்டி), வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, சேலம் அம்மாப்பேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

சேலம் வடக்கு, சேலம் மேற்கு, மேட்டூர், ஓமலூர் ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, சங்ககிரி விவேகானந்தா கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ண ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 154 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் ஒரு மேஜைக்கு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் என மொத்தம் 3 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

11 தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 154 மேஜைகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கும் சேர்த்து தலா 198 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள், வாக்கு எண்ணும் நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 594 பேர் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களுக்கும் தலா 500 போலீஸார் வீதம் மாவட்டத்தில் போலீஸார் மொத்தம் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநகர எல்லைக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களிலும், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலும் மாவட்டப் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களிலும் எஸ்பி தீபா காணிகர் தலைமையிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x