Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

நெல்லை, தென்காசி மாவட்ட தொகுதிகளில் வெற்றி யாருக்கு? : இன்று காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றிபெறப்போவது யார் என்பது இன்று தெரியவரும். காலை 11 மணிக்கெல்லாம் முன்னணி நிலவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 13,58,148. இதில் 9,03,770 பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு சதவீதம்- 66.54.

மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 76 பேர் போட்டியிட்டனர். பாளையங்கோட்டை தொகுதியில் ஜெரால்டு (அதிமுக), அப்துல்வகாப் (திமுக) உட்பட 10 பேர் போட்டியிட்டனர்.

திருநெல்வேலி தொகுதியில் நயினார்நாகேந்திரன் (பாஜக), ஏஎல்எஸ் லட்சுமணன் (திமுக) உட்பட 14 பேர் போட்டியிட்டனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கிசுப்பையா (அதிமுக), ஆவுடையப்பன் (திமுக) உட்பட மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் கணேசராஜா (அதிமுக), ரூபி மனோகரன் (காங்கிரஸ்) உட்பட 15 பேர் போட்டியிட்டனர். ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை (அதிமுக), அப்பாவு (திமுக) உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிட்டனர்.

இவர்களில் யார் வெற்றிபெறவுள்ளனர் என்பது இன்று தெரியவரும். இதற்கான வாக்கு எண்ணிக்கை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதற்காகவிரிவான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. திருநெல் வேலி தொகுதிக்கு 30, அம்பாச முத்திரத்துக்கு 26, பாளையங்கோட்டைக்கு 28, நாங்குநேரிக்கு 29 மற்றும் ராதாபுரம் தொகுதிக்கு 27 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 14 மேஜைகள் போடப்படும். காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.

வேட்பாளர்கள், முகவர்கள், பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் செல்வதற்காக வாக்கு எண்ணும் மையத்தின் முன்பகுதியில் கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுண்ணாம்பால் வட்டமிட்டு வைத்துள்ளனர்.

மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. வாக்குஎண்ணிக்கை மையத்தில் 5 அடுக்குபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணிக்கு பாதுகாப்பு பணிக்கு வருமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வழியாக நாகர்கோவில் சாலையில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மேலப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி கல்லூரியில் எண்ணப்படுகிறது. அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “சனிக்கிழமை (நேற்று) இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை (நாளை)காலை 4 மணி வரை 30 மணி நேரம்ஊரடங்கு என்பதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்குச் செல்லும் ஊழியர்கள், முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று வரலாம். மற்றவர்கள் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளேயும், வெளியேயும் துணை ராணுவ வீரர்கள் உட்பட 550 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 1,150 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். யுஎஸ்பி கல்லூரி அமைந்துள்ள சாலையில் பிற வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுகின்றன.

வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x