Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை :

இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன் வர வேண்டும் என தேன்கனிக் கோட்டை சார்பு நீதிமன்றம் திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா மற்றும் பாதிக்கப்பட்ட மற்றும் குழந்தை சாட்சிகளை பரிசோதிப்பதற்கான மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற, இந்நிகழ்விற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமை வகித்தார்.உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி அனைவரையும் வரவேற்றார். காணொலி காட்சி மூலம் புதிய நீதிமன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்து, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

சமுதாயத்தில் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்து வருகிறார்கள். மக்களை பாதுகாக்க கூடிய மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.

ஆகவே நீதித்துறையில் உள்ள வர்கள் மரியாதைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும். வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது நடுநிலையுடன் என்ன காரணத்திற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதை விளக்கமாக அளிக்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் பரவும் வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளா தாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வைரஸ் ஒரு பாடத்தை கற்பித்துள்ளது. இயற்கையை பாதுகாத்திட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் நீதிபதிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, எஸ்பி பண்டிகங்காதர், வழக்கறிஞர் சங்க தலைவர் கருணாகரன் உட்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜசிம்மவர்மன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x