Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் - வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3,000 போலீஸார் பாதுகாப்பு :

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (மே 2) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளகாஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அடையாளஅட்டையுடன், கரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் அல்லது இருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் மொத்தம் 28 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சமூகஇடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஓர் அறையில் 14 மேஜைகள் மட்டுமே போடப்பட உள்ளன.

இங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில், 4 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 12 துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மத்திய ஆயுதப் படை வீரர்கள் என மொத்தம் 1,129 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறும்போது, "செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 530 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் 6 சோதனைச் சாவடிகளும், மாவட்டம் முழுவதும் 56 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு, 350போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்குபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பெருமாள்பட்டுவில் உள்ள தனியார் கல்விக் குழும வளாகத்தில் நடைபெறுகிறது. இங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில், கூடுதல்கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், துணை ராணுவத்தினர் 228 பேரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x