Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் கரோனா நோயாளிகளின் - வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிக்க 320 மருத்துவர்கள் நியமனம் : மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்

கோ.பிரகாஷ்

சென்னை

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள கரோனா நோயாளிகளின் வீட்டுக்கு சிகிச்சை அளிக்க320 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த ஆண்டு கரோனா தொற்றின் உச்ச அளவை விட இந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது 100 பேரை பரிசோதித்தால் 20 பேருக்கு தொற்று உறுதியாகிறது. அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 33 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 10 சதவீதம் உயர்மருத்துவ சிகிச்சை பெறும் நிலையிலும், 70 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும், 20 சதவீதம் பேர் கரோனா பராமரிப்பு மையத்திலும் உள்ளனர்.

சென்னையில் உயர் மருத்துவ சிகிச்சை பெறுவோர் அதிகரிக்கலாம் என கருதப்படுவதால், ஆக்சிஜன், ஐசியு, வென்டிலேட்டர் படுக்கைகள் போன்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் சுமார் 2 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் சுகாதாரத் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

1,440 ஆக்சிஜன் படுக்கைகள்

மாநகராட்சி சார்பில், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் ஆலோசனையின் பேரில், நந்தம்பாக்கத்தில் 860 ஆக்சிஜன் படுக்கைகள், 140 சாதாரணபடுக்கை வசதிகள், தென்சென்னையில் ஈஞ்சம்பாக்கம், வடசென்னையில் மணலி ஆகிய இடங்களில் உள்ள சமுதாய நல மையங்களில் தலா 100 படுக்கைகள்,தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 240 படுக்கைகள் என சுமார் 1,440 ஆக்சிஜன் படுக்கைகள், அடுத்த 10 நாட்களில் அமைக்கப்பட உள்ளன.

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்ட கரோனா தொற்றாளர்கள் கவனிப்பு முறையின் தரத்தை மேம்படுத்த, அம்மா கிளினிக் மருத்துவர்கள் 200 பேர், புதிதாக எடுக்கப்படும் 120 மருத்துவர்கள் என 320 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்புனர்கள் ஆகியோர் கொண்ட குழுக்கள், வீடுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை தினமும் நேரில் சந்தித்து, அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சென்னையில் இறப்பு விகிதம் குறையும்.

புதிதாக கரோனா தடுப்பூசி வந்து சேராத நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி மே 1-ம் தேதி தொடங்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x