Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து - ஜிப்மரில் அனைத்து மாணவர்களுக்கும் மே 3 முதல் ஆன்லைன் வகுப்பு :

புதுச்சேரி ஜிப்மரில் எம்பிபிஎஸ், பிஎஸ்சி நர்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பில் இறுதிஆண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து மற்ற அனைத்து மாணவர்களுக்கும் வரும் 3-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரி (அகாடமி) புல முதன்மையர், அனைத்து துறைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிஎஸ்சி நர்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு வரும் மே 3-ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டும்வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

நேரடி வகுப்புகள் நடைபெறாது. விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர்கள் அரங்கில் வகுப்பு நடைபெறும். விடுதிகளில் தங்கியுள்ளோர் வீட்டுக்கு புறப்பட்டு செல்லலாம். அறிவித்தபடி வரும் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் அனைவருக்கும் தொடங்கி நடைபெறும்.

விடுதியில் இருந்து வீட்டுக்கு செல்வோருக்காக, ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 1-ம் தேதி (இன்று) வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. மே, ஜூன்ஆகிய மாதங்களில் இறுதி ஆண்டுத்தேர்வு எழுதும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான மதிப்பீட்டு தேர்வு, செய்முறை தேர்வு போன்றவை இங்கு நடைபெறும்.

எனவே எம்பிபிஎஸ், பிஎஸ்சி நர்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் இறுதியாண்டு மாணவர்கள் இங்கேயே இருக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் கரோனா பாதுகாப்புடன் கவனமாக இருந்து படிக்க வேண்டும். இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

வீடுகளுக்கு செல்பவர்கள் தங்களது விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கல்லூரியை விட்டு செல்பவர்கள், அடுத்த அறிவிப்பு வரும் வரை திரும்ப வரக் கூடாது. துறைத்தலைவர்கள் மே 3-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தயாராக இருக்க வேண்டும்.

இந்த ஆன்லைன் வகுப்புகள் வரும் மே 16-ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு, அடுத்தக்கட்ட நிலை குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x