Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

சேலம் மாவட்டத்தில் 90 தெருக்கள் தடை செய்யப்பட்டு கண்காணிப்பு :

சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த 90 தெருக்கள் தடை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலம் அகரம் காலனி பகுதியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,76,164 பேருக்கு கரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 40,695 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு 36,327 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது, 3,533 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 505 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 90 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள 1,946 வீடுகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இப்பகுதியில், கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பற்றிய தகவல் மற்றும் உதவி தேவைப்படும் பொதுமக்கள், சேலம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் இயங்கி வரும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் 0427-2450498, 0427-2450022, 915415 5297 தொலைபேசி எண்கள் மற்றும் உதவி மையங்களை 104, 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல, கரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும். பொதுமக்கள் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x