Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - 6 தொகுதிகளில் 165 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை :

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் தேர்தல் பொது பார்வை யாளர்கள் பல்சானா, அனுராதா, ஹன்ஸ்ராஜ் சுஹான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 84 மேஜைகளில், சுமார் 165 சுற்றுகள் எண்ணப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏப். 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பயன்படுத் தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் பல்சானா, அனுராதா, ஹன்ஸ்ராஜ் சுஹான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆட்சியர் கூறியதாவது:

6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை (2-ம் தேதி) காலை 8 மணிக்கு எண்ணப்படும். 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2298 வாக்குச்சாவடி மையங்களில் 15,241 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள 9 அறைகளில் 84 மேஜைகளில் சுமார் 165 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்றார்.

595 போலீஸார் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் நாளை (2-ம் தேதி) வாக்கு எண்ணும் மையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எஸ்பி பண்டிகங்காதர் தலைமையில் 6 டிஎஸ்பிக்கள், 13 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 595 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள 84 மேஜைகளுக்கு 102 வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர்கள், 102 உதவியாளர்கள், 102 நுண் பார்வையாளர்கள், 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் 86 வேட்பாளர்கள் மற்றும் 1216 முகவர்கள் வாக்கு மையத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் நபர்கள் அனைவரும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நல்ல முறையில் நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x