Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு :

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணிஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 மையங்களில் நாளை (மே 2) எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் ஆகியோர் பணியாற்றவுள்ள தொகுதிகளை ஆட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் 2-வது கட்டப் பணி நேற்று ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

இதில், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களான சூர்யா மத்ஹாபா பணிக்ரகி (ரங்கம்), எஸ்.என்.கிரிஷ் (திருச்சி மேற்கு), என்.பி.எஸ்.ரஜ்புட் (திருச்சி கிழக்கு), கிருஷ்ணகுமார் (லால்குடி), அசோக்குமார் தாஸ் (மண்ணச்சநல்லூர்), சுரேந்தர்ராம் (முசிறி), மம்மத்குமார் பானி (துறையூர்) ஆகியோர் பங்கேற்றனர்.

நாளை வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர், நுண் பார்வையாளர் என தலா ஒருவர் ஈடுபடுவர். ஒவ்வொரு மேசையிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்வதற்கான கணினி முறை குலுக்கல், குளித்தலை தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் அவயகுமார் நாயக், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அரவக்குறிச்சி தொகுதியில் 310 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், ஒரு அறையில் 10 மேசைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 31 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 24 மேற்பார்வையாளர்கள், 24 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 24 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 72 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

கரூர் தொகுதியில் 355 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 2 அறைகளில் தலா 10 மேசைகள் வீதம் அமைக்கப்பட்டு, 18 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 48 மேற்பார்வையாளர்கள், 48 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 48 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 144 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 297 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், ஒரு வாக்கு எண்ணும் அறையில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 17 மேற்பார்வையாளர்கள், 17 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 51 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

குளித்தலை தொகுதியில் 312 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், ஒரு வாக்கு எண்ணும் அறையில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 23 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 17 மேற்பார்வையாளர்கள், 17 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 51 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

இதன்படி, 4 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 106 மேற்பார்வையாளர்கள், 106 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 106 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 318 அலுவலர்களுக்கு கணினி முறை குலுக்கல் நடத்தப்பட்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) ஷாஜகான், வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x