Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் - தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடன் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனாவின் 2-வது அலை பரவத்தொடங்கியது. தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 16 ஆயிரம் என்ற அளவில் தொற்று பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

முதல் அலையைவிட 2-ம் அலையின் வீரியம் அதிகமாக இருப்பதோடு, இறப்பும் அதிகரித்து வருவதால், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஏப்.20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டன.

மேலும், ஏப்.26-ம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதுதவிர, 3ஆயிரம் சதுரஅடி மற்றும் அதற்குமேற்பட்ட பெரிய கடைகள், வணிகவளாகங்கள் மற்றும் அழகு நிலையங்கள், சலூன்கள் மூடப்பட்டன. வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

புதுச்சேரி தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர், வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் மூலம் வருவோர் ‘http://eregister.tnega.org’ என்ற இணையதளத்தில் பதிவு செய்த விவரத்தை காட்டினால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கும் மேல் பங்கேற்க அனுமதியில்லை.

தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இறைச்சி கடை சனிக்கிழமை மூடல்

பேருந்துகளில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாடகை டாக்ஸிகளில்,ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2பேரும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், முதல் நாளான சனிக்கிழமையில் மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, சனிக்கிழமைகளில் மீன், இறைச்சிக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்த கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே உள்ளதளர்வுகள் ஆகியவை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்.30-ம் தேதி (இன்று) இரவு 12 மணியுடன் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த அறிவிப்பு தொடர்பான தேதி குறிப்பிடப்படாமல் ஊரடங்கை அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகளில் தளர்வு

அதேநேரம் இந்த அரசாணையில் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகள், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும். மே 2-ம் தேதிவாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குஎண்ணிக்கை தொடர்பான அலுவலர்கள், அரசியல் கட்சியினருக்கு விலக்களிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் குறிப்பிட்ட அளவு சேவைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. அனைத்து துறைமுகங்களில் இருந்தும் சரக்குகள், பணியாளர்கள் செயல்பாடுகளுக்கு இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு காலங்களில் அனுமதியுண்டு. கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீதம்பொதுமக்களுடன், நிலையானவழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம். திரைப்படம், சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளுக்கு தொடர்ந்து அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்தப் பகுதிகளில் நிலவும் கரோனா தொற்று பரவல் அடிப்படையில் மாவட்டத்திலும், குறிப்பிட்ட பகுதிகளிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இந்தக் கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையர்மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x