Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

கரோனா தடுப்பூசி, பிபிஇ உடை போன்ற - முகவர்களுக்கான கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் : தேர்தல் ஆணையரிடம் திமுக மனு

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள், 2 டோஸ் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், பிபிஇ உடை அணிந்திருக்க வேண்டும் என்பது போன்ற சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆகியோருக்கு நேற்று அனுப்பிய மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 24-ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில், “வாக்குகளை எண்ணுபவர், அரசியல் கட்சிகளின் முகவர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டி - பிசிஆர் பரிசோதனை செய்து கரோனா இல்லை என்று முடிவு வைத்திருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி முதல் தவணையாவது கட்டாயம் போட்டிருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு தவணை தடுப்பூசி

ஆனால், கடந்த 28-ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பிய கடிதத்தில், “ஆர்டி - பிசிஆர் பரிசோதனை செய்யாத, இரு தவணைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வேட்பாளர்கள், கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக கரோனாஇல்லை என்ற ஆய்வக முடிவையும், இரு தவணைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள், முகவர்களுக்கான ஆர்டி - பிசிஆர் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் இவற்றுக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தேர்தல் அதிகாரி மேற்கொள்வார். வாக்கு எண்ணும் 3 நாட்களுக்கு முன்னதாக, வேட்பாளர்களால் முகவர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோர் அனுப்பிய கடிதங்களில் உள்ள விதிமுறைகள் முரண்பாடாக உள்ளன. முகவர்கள் பிபிஇ உடை அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. கரோனா பரிசோதனை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகவா அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பாகவா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.

6 மணி நேரத்துக்கு மேல்..

முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 8 வாரங்களுக்குப் பிறகே 2-வதுதவணை தடுப்பூசி போட முடியும். எனவே, 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது சாத்தியமல்ல. வெயில் காலம் என்பதால் 14 முதல் 16 மணி நேரம் வரை பிபிஇ உடை அணிந்திருப்பதும் சாத்தியமற்றது. 6 மணி நேரத்துக்கு மேல் பிபிஇ உடை அணியக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

முகக்கவசம், சானிடைசர் மூலம் கை கழுவுதல், கையுறை அணிவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய முடியும். பிபிஇ உடை அணிவது நடைமுறைப்படியும் மருத்துவ ரீதியாகவும் ஏற்றதல்ல. தேர்தல் ஆணையத்தின் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை திமுக உறுதியுடன் பின்பற்றி வருகிறது. எனவே, பிபிஇ உடை அணிய வேண்டும், 2 தவணைகள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது போன்ற சாத்தியமற்ற கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற்று ஒரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் போதும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x