Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

கர்நாடகாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் - ஓசூர் - பெங்களூரு இடையே அரசுப் பேருந்து இயக்கம் நிறுத்தம் :

கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழுஊரடங்கு எதிரொலி யாக இருமாநிலங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகளின் இயக்கம் 14 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளும், பெங்களூருவி லிருந்து ஓசூர் நகருக்கு வரும் பயணிகளும் இருமாநில அரசுப் பேருந்துகள் இன்றி திண்டாடினர்.

கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா எதிரொலியாக ஏப்ரல் 27-ம் தேதி முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு 9 மணி முதல் தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கிடையே அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓசூர் வழியாக பெங்களூரு சாட்டிலைட் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன.

ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள், தமிழக எல்லையான ஜுஜுவாடி வரை இயக்கப்பட்டு வரும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து அங்கிருந்து சுமார் 1.50 கி.மீ தூரம் வரை நடந்து சென்று கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி வழியாக அம்மாநிலத்துக்குள் செல்கின்றனர். அதேபோல கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் அம்மாநில எல்லையான பெங்களூரு அத்திப்பள்ளி வழியாக நடந்து வந்து ஜுஜுவாடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து ஓசூர் பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓசூர் பேருந்து நிலைய உதவி மேலாளர் கூறுகையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சேலம் மண்டல பேருந்துகள் - 168, தருமபுரி மண்டல பேருந்துகள் - 140, விழுப்புரம் மண்டல பேருந்துகள் - 110 என மொத்தம் 418 விரைவு பேருந்துகள் ஓசூர் வழியாக பெங்களூரு நகருக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஓசூர் - அத்திப்பள்ளி இடையே இயக்கப்பட்டு வந்த 20 தமிழக அரசுப் பேருந்துகளும் தற்போது ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x