Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி : 8 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி

மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக 8 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ள நீதிமன்றம், அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் கரோனா நோயாளி களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயி ரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தால் 1,050 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயா ரித்து இலவசமாக அளிக்கத் தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் அனைத் துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க அனுமதி அளிப்பது என தீர்மானிக் கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:

சி.எஸ்.வைத்தியநாதன் (தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்):

ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் ஸ்டெர் லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது. வேதாந்தா நிறுவனம், ஆக்சி ஜன் தயாரிப்புக்கு மட்டுமே ஆலையை பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரக் கூடாது. அரசின் கண்காணிப்புக் குழு மேற்பார்வையில்தான் ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி சந்திரசூட்: ஸ்டெர்லைட் ஆலை இயக்கம் தமிழக அரசின் கண் காணிப்பில் இருக்கலாம். அதேநேரம் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை தடுக்கக் கூடாது.

நீதிபதி ரவீந்திர பட்: அங்கு உற் பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மத்திய அரசு மூலமாகவே பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சி.எஸ்.வைத்தியநாதன்: அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழக தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றுதான் நாங் களும் கோருகிறோம்.

துஷார் மேத்தா (மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்): ஸ்டெர்லைட் ஆலை மூலமாக உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் ஒப் படைக்க வேண்டும். நாடு முழுவதும் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பற்றாக்குறை உள்ளது என்பதை கணக் கிட்டு அதனடிப்படையில் மத்திய அரசுதான் அதை சரியாக பிரித்து வழங்க முடியும். இதில் தமிழக அரசுக்கு முன்னுரிமை வழங்க முடியாது.

ஹரிஷ் சால்வே (வேதாந்தா நிறுவன மூத்த வழக்கறிஞர்): ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே தயாரிப் போம். அதற்காக தமிழக அரசு மின்சாரம் வழங்க வேண்டும். கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அக்குழுவில் உள் ளூர் பொதுமக்களின் சார்பு பிரதிநிதிகள், என்ஜிஓ-க்களின் பிரதிநிதிகளை எதிர்க் கிறோம்.

நீதிபதி சந்திரசூட்: இந்த இக்கட்டான சூழலில் பற்றாக்குறையை சமாளித்து பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். ஆலையில் எவ்வளவு விரைவாக ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க முடியும்?.

ஹரீஷ் சால்வே: 10 நாட்களுக்குள் 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதை யாரிடம் வழங்க வேண்டும் என்பதை கூறினால் அவர்களிடம் வழங்கத் தயார்.

காலின் கோன்சால்வேஸ் (தூத்துக் குடி பொதுமக்கள் தரப்பு மூத்த வழக் கறிஞர்): ஸ்டெர்லைட் ஆலையை மீண் டும் திறக்க வேண்டும் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த மோசமான நிறுவனத்தால் நாங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம்.

நீதிபதி சந்திரசூட்: தற்போதைய சூழலில் ஆக்சிஜன் உற்பத்தி நாட்டுக்கு தேவை என்பதை மட்டுமே மனதில் வைத்து இந்த வழக்கை விசாரிக்கிறோம். பிற விவகாரங்களுக்காக அல்ல. இந்த ஆலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை தயாரிக்க முடியுமா என தமிழக அரசு விசாரித்ததா?

சி.எஸ்.வைத்தியநாதன்: தற்போ தைய நிலையில் உடனடியாக 35 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக் சிஜனை அங்கு தயாரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வாதம் நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர் லைட் ஆலையை திறக்க அனுமதிக் கிறோம். ஆலையின் இயக்கத்தை மேற் பார்வையிடும் கண்காணிப்புக் குழுவில் சுற்றுச்சூழல் துறை சார்ந்த அமைச்சக நிபுணர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இதில் அரசியல் வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் துணை நிற்போம். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 மத்திய அரசு நிபுணர்களில் இருந்து 2 பேரை உள்ளூர் பொதுமக்கள் தரப்பு 48 மணி நேரத்தில் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு தவறினால் தமிழக அரசே 2 நிபுணர்களை நியமிக்கலாம்.

இவர்கள் தவிர்த்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுற்றுச்சூழல் பொறி யாளர், துணை ஆட்சியர், 2 துறை சார்ந்த அரசு அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் இக்குழுவில் இடம்பெற வேண் டும். இந்த உத்தரவு வேதாந்தா நிறுவனத் துக்கு ஒருபோதும் ஆதரவாக அமை யாது. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மத்திய அரசு மூலமாகவே தேவையுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலைக் குள் செல்லும் ஊழியர்களின் பட்டி யலை தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் அளித்து ஒப்புதல் பெற வேண்டும். ஒருவேளை தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது என கருதினால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x