Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

தேசிய நெருக்கடி நேரத்தில்வாய்மூடி மவுனம் காக்க முடியாது : கரோனா விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி

ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற தேசிய நெருக்கடி நேரத்தில் வாய்மூடி மவுனமாக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்துவிவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதையே நாங்கள் விரும்புகிறோம். உயர் நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விசாரித்தாலும் நாங்களும் வாய்மூடி மவுனமாக இருப்பதை விரும்பவில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது தேசிய நெருக்கடியாகும். இதனை அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம்.

தேசிய அளவிலான பிரச்சினைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறும்போது, “தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாள்கின்றன" என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரோனா இரண்டாம் அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் மருந்துகையிருப்பு, கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும்30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x