Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

கோவாக்சின் தடுப்பூசியின் விலை மாநில அரசுகளுக்கு ரூ.600 - தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 : பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயம்

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையை மாநில அரசுகளுக்கு ரூ.600 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 ஆகவும் நிர்ணயித்துள்ளது. இது சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயித்த விலையை விட அதிகம்.

இந்தியாவில் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களே தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்துக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், உற்பத்தியில் 50 சதவீதத்தை மத்தியஅரசுக்கும் மீதமுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும் பொதுச் சந்தை விற்பனைக்கும் வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

முன்னதாக, ஒரு டோஸுக்கு ரூ.150 என்பதே போதுமான லாபம்தரக்கூடியது என்று சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லா தெரிவித்திருந்தார். ஆனால்மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்த பிறகு, சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸுக்கான விலை மாநில அரசுகளுக்கு ரூ.400ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயித்தது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கான விலையை மாநில அரசுகளுக்கு ரூ.600 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 ஆகவும் விலைநிர்ணயம் செய்துள்ளது. மேலும்,50 சதவீத தடுப்பூசியை மத்தியஅரசுக்கு தொடர்ந்து ரூ.150-க்குவழங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு மத்திய அரசை விட நான்கு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது. அதேபோல், வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கான விலை ரூ.1,120 முதல் ரூ.1,500 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்தியாவில் 13.81 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீதம் கோவாக்சின், 90 சதவீதம் கோவிஷீல்டு தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x