Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க - தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : திரையரங்குகள், பார், சலூன்கள், ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லைவழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

இதன்படி வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபடுவதற்கு தடை, திரையரங்கு கள், மதுக் கூடங்கள், பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதியில்லை, புதுச்சேரி தவிர இதர மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பதிவு நடைமுறை கட்டாயம் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஏப்.30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, மேலும் புதிய கட்டுப் பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற் றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதால் நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. தொற்று வேகமாக பரவி வருவதையும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு ஏற் கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு களுடன் நாளை அதிகாலை 4 மணி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. அதன் விவரம் வருமாறு:

l அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக் கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை.

l பெரிய கடைகள் (big format shops), வணிக வளாகங்கள் (Shopping Malls) இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகள் வழக்கம் போல் செயல்படலாம். வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு, காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதியின்றி, 50% வாடிக்கை யாளர்களுடன் இயங்கலாம்.

l சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை.

l அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். அமர்ந்து உண்ண அனுமதியில்லை. விடுதியில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்ண அனுமதியில்லை.

l அனைத்து மின் வணிக சேவைகள் நேரக் கட்டுப்பாட்டுகளுடன் இயங்கலாம்.

l அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை. இருப்பினும் தினசரி பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை வழிபாடுகளை ஊழியர்கள் மூலம் நடத்த தடையில்லை.

l குடமுழுக்கு, திருவிழா நடத்த அனுமதி பெற்றிருப்பின், பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக் கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு, திருவிழா நடத்த அனுமதி இல்லை.

l திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும் இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது.

l தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

l கோல்ப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை. எனினும் சர்வதேச, தேசிய அளவிலான பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

l புதுச்சேரி தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருவோர், வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் மூலம் வருவோர் ‘http://eregister.tnega.org’ என்ற இணையதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழகத்துக்குள் நுழை யும் போது காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

l தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். நின்று பயணிக்க அனுமதியில்லை.

l வாடகை டாக்ஸிகளில், ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேரும் பயணிக்க அனுமதியுண்டு. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

l தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

பொதுவான நடைமுறைகள்

l தொழில் நிறுவனங்களுக்கான பொது முடக்க கால செயல்பாடுகள் தொடர் பாக ஏற்கெனவே ஏப்.18 மற்றும் 20-ம் தேதிகளில் அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மாறுதலின்றி தொடர்கின்றன.

l பணிக்குச் செல்லும் பணியாளர்கள், தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டைகளை தவறாமல் அணிந்து செல்ல வேண்டும்.

l அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. வீட்டிலும் பணிபுரி யும் இடங்களிலும் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகழுவுவது, வெளியிடங் களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்று வதும் அவசியம். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் தான் கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி ஆலோசனை, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x