Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM

வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் :

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.

பானகம்

வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றிக் கரைத்துக்கொள்ளுங்கள். 2 அல்லது 3 வெற்றிலை (காம்பை நீக்கிவிடுங்கள்), ஒரு கைப்பிடி துளசி இரண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் சுக்கு அல்லது இஞ்சியைத் துருவிக்கொள்ளுங்கள். வெற்றிலை விழுதையும் இஞ்சித் துருவலையும் வெல்லத் தண்ணீரில் கரைத்து, ஒரு சிட்டிகை ஏலப்பொடி சேர்த்துக் கலந்து வடிகட்டிப் பரிமாறலாம்.

பான் கேக்

ஒரு கப் கோதுமை மாவு, ஒரு வாழைப்பழம், கால் கப் பால், ஒரு டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரையுங்கள். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். இந்த மாவைத் தவாவில் தடிமனாக ஊற்றி, மூடிவைத்து வேகவையுங்கள். நன்றாக வெந்ததும் தேன் அல்லது பழம் கலந்து சாப்பிடக் கொடுக்கலாம்.

தினை லட்டு

தினை அரிசியை மாவாக அரைத்து, வெறும் கடாயில் போட்டுச் சிவக்கும்வரை வறுத்து ஆறவையுங்கள். ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாகத் தூள் செய்து மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள். பாதாம், முந்திரி, திராட்சை, வால்நட், பேரீச்சை ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேருங்கள். ஒரு சிட்டிகை சுக்குப் பொடி, ஒரு சிட்டிகை ஏலப்பொடி இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். நெய்யைக் காய்ச்சி மாவில் ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கருப்பட்டி அல்லது வெல்லத்தைச் சேர்க்கும்போது நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி கொஞ்சம் கெட்டியாக ஆனதும் மாவில் கலக்கலாம். கெட்டிப் பாகாகக் காய்ச்சக் கூடாது.

காராமணி வடை

ஒரு கப் வெள்ளைக் காராமணியுடன் சிறுதானியங்களான தினை, வரகு இரண்டில் ஏதாவது ஒன்றைக் கால் கப் சேர்த்து ஊறவையுங்கள். சிறுதானியம் இல்லையென்றால் அரிசியைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கலவையை மூன்று முதல் 4 மணிநேரம் ஊறவையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 3 டீஸ்பூன் தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேருங்கள். அதனுடன் கால் டீஸ்பூன் பெருங்காயம், விரும்பினால் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து மெலிதான வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள். புரதச் சத்து நிறைந்த இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை கிடையாது. வெள்ளைக் காராமணியில் சுண்டலும் செய்து சாப்பிடலாம்.

சிறுதானிய அப்பம்

ஒரு கப் கோதுமை மாவுடன் அரை கப் அரிசி மாவு, அரை கப் தேங்காய்த் துருவல், சிறிதளவு முந்திரி, பாதாம், வால்நட் (மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துச் சேருங்கள்) சிறு துண்டுகளாக நறுக்கிய இரண்டு பேரீச்சம்பழம், ஒரு சிட்டிகை ஏலப்பொடி, ஒரு வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். முக்கால் கப் வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டி மாவில் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். இதை எண்ணெய்யில் கரண்டியால் ஊற்றியும் சுட்டெடுக்கலாம் அல்லது குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் அல்லது நெய்விட்டும் சுடலாம்.

கொள்ளு சுண்டல்

ஒரு கப் கொள்ளுவையும் ஒரு கப் பச்சைப் பயறையும் இரவே ஊறவையுங்கள். இல்லையென்றால் காலையில் ஊறவைத்தால் மாலையில் செய்யலாம். கொள்ளுடன் பச்சைப் பயறைச் சேர்ப்பது நல்லது. கொள்ளு சூடு, பயறு அதை மிதப்படுத்தும். இரண்டையும் குக்கரில் வேகவைத்துத் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். சுண்டலைச் சேர்த்து, உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். இஞ்சியைச் சேர்த்தால் சுவை கூடும். விரும்பினால் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்துகொள்ளலாம். வெயிலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும்.

சோளமாவு முறுக்கு

நான்கு கப் வெள்ளைச் சோள மாவில் ஒரு கப் கடலை மாவு, 2 டீஸ்பூன் வெண்ணெய், 1 டீஸ்பூன் காரப்பொடி (தேவையென்றால்), தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் எள் அல்லது சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்தெடுங்கள். வெண்ணெய் வேண்டாம் என்றால் எண்ணெய்யைக் காய்ச்சி சேர்க்கலாம்.

ராகி மசாலா இட்லி

நான்கு கப் ராகி மாவைக் கெட்டியாகக் கரைத்து வையுங்கள். முக்கால் கப் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கிவிட்டிருக்கும். இந்த மாவை இட்லித்தட்டில் ஊற்றி, இட்லிகளை ஆறவைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவையுங்கள்.

கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். அதில் ஒரு குடைமிளகாய், ஒரு கேரட், ஒரு வெங்காயம், இஞ்சித் துண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிச் சேருங்கள். சிறிதளவு பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள் போட்டு வதக்குங்கள். பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டியெடுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x