Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் - கரோனா கட்டுப்பாடுகளை மதித்து செயல்பட வேண்டும் : திமுகவினர், பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை மக்களும் திமுகவினரும் மதித்து செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தாக்கம் வேகமாகவும், கோரமாகவும் இருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்த செய்தி நெஞ்சைப் பிளக்கிறது.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தடுப்பூசிமருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையைஉயர்த்தியிருப்பது மாநிலங்கள் மீது ஏற்றப்பட்ட பெரும் சுமையாகும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆட்சிக்கு வரும் காலம் கனிந்திருக்கின்ற போதும் மக்கள் நலனே முதன்மையானது என செயல்படும் திமுக, இந்தப் பேரிடர்காலத்திலும் பணியாற்றி வருகிறது. கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் தொகுதிகளில் வசிப்பவர்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி, தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டேன். தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கூட்டம் சேர்வதை தவிர்த்தல், பாதுகாப்பு முறைகளை கையாளுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் இவைதான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

திமுக நிர்வாகிகள், வேட்பாளர்கள், செயல்வீரர்கள் அனைவரும் மக்களுக்கு உதவி வருகின்றனர். அதேநேரம், கரோனாவால் திமுகவினரும் மரணமடைகிற வேதனைச்செய்திகள் வருகின்றன. தன் உயிர் போல பிற உயிர்களை நேசிப்பதும், பிற உயிர்களைப் போல தன்னுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இந்தப் பேரிடர் சூழலில் இன்றியமையாததாகும். அதை உணர்ந்து திமுகவினர் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகளில் இருந்து இன்றுவரை மீள முடியவில்லை. தொழில்வாய்ப்புகளை இழந்தோர், வேலையை பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த2-வது அலை தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. மக்களும், திமுகவினரும் அவற்றுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கரோனா பரவல் குறையும் வகையில் பாதுகாப்பு முறைகளை கையாள்வோம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x