Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட - மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை வேண்டும் : தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும்போது 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள நேரத்தில், தமிழக அரசுக்கே தெரியாமல் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படி இருக்கிறது என்ற அடிப்படை கேள்வியைக்கூட தலைமைச் செயலாளர் அல்லது காபந்து அரசிடம் கேட்டு தெரிந்துகொள்ளாமல் மாநில அரசுகளை கிள்ளுக்கீரைகளாக நினைக்கும் போக்குடன் நடந்து கொள்கிறது.

ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று மத்திய அரசு கூறிவந்த நிலையில், இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

நெருக்கடி மிகுந்த சூழலில்தமிழகத்தில் மட்டும் 12.10 சதவீத தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளது ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. தமிழக அரசு இதற்கு சொல்லும் காரணமும் ஏற்புடையதாக இல்லை. அதிமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்துக்குரியது.

ரெம்டெசிவர் மருந்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கருவிகள் இல்லை. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ஆர்டி-பிசிஆர் கிட்களை விற்க முன்வந்தாலும், அதிமுக அரசுபிரேசில் நாட்டிலிருந்து அதிகவிலை கொடுத்து வாங்குவதிலேயே ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பது, ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கத் தேவையானவை தட்டுப்பாடின்றி கிடைத்திடச் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும். கரோனா பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x