Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

‘24 வயதிலேயே கொடுத்தது இல்லை' - 40 வயதில் எனது ஆட்டத்துக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது : மனம் திறக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி

24 வயதிலேயே செயல்திறனுக்கு நான் உத்தரவாதம் கொடுத்தது இல்லை. அப்படியிருக்கும் போது தற்போது 40 வயதில் எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன் தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 189 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியானது ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோரது சுழல் வலையில் சிக்கியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

மொயின் அலி 3 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களயும், ஜடேஜா 4 ஓவர்களில் 28 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “வயதும், உடற்தகுதியும் கடினமான இரு விஷயங்கள். விளையாடும்போது, நீங்கள் தகுதியற்றவர் என யாரும் கூறுவதை விரும்பமாட்டீர்கள். நான் இளம் வீரர்களுடன் விளையாடுகிறேன். அவர்கள் மிக வேகமாக உள்ளார்கள். அவர்களுக்கு சவால்விடுவது நல்லது.

செயல்திறன் என்பது உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒன்று. 24 வயதிலேயே நான், செயல்திறனுக்கு உத்தரவாதம் கொடுத்தது இல்லை. தற்போது எனக்கு 40 வயதாக இருக்கும் போது உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் குறைந்த பட்சம், உடற் தகுதியற்றவன் என்று மக்கள் என்னை சுட்டி காட்ட முடியாவிட்டால், அது எனக்கு ஒரு பெரிய சாதகமாக இருக்கும்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை பொருத்தவரையில் சேம் கரண் சிறப்பாக பந்து வீசுவதை உணர்ந்தேன். தீபக் ஷாகர் நக்குல் பந்துகளை வீசுவதில் சிறிது தவறான கணக்கீடுகளை கொண்டிருந்தார். நல்ல தொடக்கம் முக்கியம் என உணர்ந்தேன். ஈரமான பந்துகூட சுழன்று கொண்டிருந்தது. ஜாஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடியது குறித்து நான் கவலைப்படவில்லை. பந்து ஈரமாக இருக்கும் போது திரும்பியிருந்தால், உலர்ந்த பந்து திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். மொயின் அலி சிறப்பாக 3 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தியது சிறப்பானது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x