Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு :

தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை தீரத்துடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணமுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் வாங்கனி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த வாங்கனி ரயில் நிலையத்தின் 2-ம் எண் நடைமேடையில் பெண் ஒருவர், தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்தத் தாயின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த குழந்தை, திடீரென்று நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அப்போது அந்த தண்டவாளத்திலேயே ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தத் தாயார் அபயக் குரல் எழுப்பினார்.

அப்போது 144 தடை உத்தரவு காரணமாக ரயில் நிலையத்திலும் யாரும் இல்லை. அப்போது குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததைப் பார்த்து எங்கிருந்தோ ஓடிவந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் குழந்தையை சரியான நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்துக்கு தூக்கிவிட்டார்.

இதனால் குழந்தை உயிர்பிழைத்தது. ரயில் வேகமாக வரும் நேரத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மயூர் செயல்பட்ட விதம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

அவர் குழந்தையைக் காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து மயூர் ஷெல்கே கூறும்போது, “குழந்தை தண்டவாளத்தில் கிடந்ததைப் பார்த்ததும் நான் வேகமாக ஓடினேன். என்னால் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஆபத்து இருப்பதையும் நான் உணர்ந்து செயல்பட்டேன். ரயில் வருவதற்குள் குழந்தையைத் தூக்கி பிளாட்பாரத்தில் போட்டுவிட்டு நான் தாண்டிக் குதித்தேன். குழந்தையை ஏன் அந்த தாய் தவறவிட்டார் என்பது எனக்குப் பின்னர்தான் தெரிந்தது. அவருக்கு கண்பார்வை கிடையாது. அதனால்தான் அவர் குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

குழந்தையைக் காப்பாற்றியதும் அந்த பெண்மணி கண்ணீருடன் நன்றி சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல் சக ஊழியர்களும், அதிகாரிகளும் எனது தீரச் செயலைப் பாராட்டினர். உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய விஷயம் எதுவும் கிடையாது” என்றார்.

இந்நிலையில் மயூர் ஷெல்கேவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல். அவரைப் பாராட்டி தனதுட்விட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர்.

ரயில்வே ஊழியர்கள் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலுமிருந்து மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x