Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

விருத்தாசலத்தில் - வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி :

விருத்தாசலத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியை திமுக உள்ளிட்ட கூட்டணிகட்சியினர் நேற்று சிறைபிடித்தனர்.

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் விருத்தாசலம், திட்டக்குடிசட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கன்டெய்னர் லாரி ஒன்று இக்கல்லூரியின் அருகே நின்று கொண்டிருந்தது.

இதைக் கண்ட திமுகவினர், அந்த வாகனம் அருகில் சென்று விசாரித்தபோது, உடனடியாக ஓட்டுநர் லாரியை அங்கிருந்து நகர்த்தியுள்ளார். இருப்பினும் லாரியை மடக்கிய திமுகவினர், கன்டெய்னர் உள்ளே என்ன இருக்கிறது எனக் கேட்டு லாரியை நகர்த்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், அங்கு சென்று ஆய்வு நடத்தினார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்புதலுடன், சார் ஆட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் விஜயரங்கம் முன்னிலையில் கன்டெய்னர் லாரியின் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

அத்தனையும் தேங்காய் நார்கள்

அதில் கட்டுக் கட்டாக தேங்காய் நார்கள் இருந்தன. அவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னை கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. திமுக கூட்டணிக் கட்சியினரும் அதை உறுதி செய்தனர். இதையடுத்து கன்டெய்னருக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டு லாரி அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

ஓட்டுநர் வேதனை

லாரி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, பொள்ளாச்சியில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்றேன். எனது குடும்பம் விருத்தாசலத்தில் உள்ளதால், அவர்களைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அவர்களை பார்த்துவிட்டு செல்லலாம் எனலாரியை நிறுத்திவிட்டுச் சென்றேன். ஆனால் நிலைமை இப்படியாகி விட்டது எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x