Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு : விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை; எஸ்பி டாக்டர் விஜயகுமார் எச்சரிக்கை

திருப்பத்தூர்

கரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பேரதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கையும் அதையொட்டி ஒரு சில கட்டுப்பாடுகளை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதி (நேற்று) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்த வரை கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8,650-ஆக உயர்ந்துள்ளது. கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 589 பேர் அரசு மருத்துவமனை கள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 194 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ 2,500 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றுவது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மாவட்டம் முழுவதும்38 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நேற்றிரவு முதல் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 காவல் உட்கோட்டங்கள் (சப்-டிவிஷன்) உள்ளன. மாவட்டம் முழுவதும் 780 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா தடுப்புப்பணிகளில் காவல் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த காவலர்களுக்கு பிரத்யேக இரு சக்கர வாகனங் கள் 15 காவலர்களுக்கு வழங்கப் படவுள்ளன.

இதன் மூலம் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் காவலர்கள் கரோனா தடுப்பு குறித்தும், கரோனாவின் பாதிப்பு குறித்தும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எடுத்துரைப்பார்கள். முதல் அலையை காட்டிலும், 2-வது அலை தீவிரமடைந்து வருவதால் கரோனா தொற்றை கட்டுப்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ? அதை மாவட்ட காவல் நிர்வாகம் செய்து வருகிறது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதையும் அதிகமாக வலியுறுத்தி வருகிறோம். இதற்கு. முன் உதரணமாக இருக்க திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றி வரும் 780 காவலர்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட காவலர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் ‘கிராம கண்காணிப்பு குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் கிராம மக்களுக்கு தடுப்பூசி போட தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதேபோல, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக் கப்பட்டு, அங்கு ஒரு உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் கண்காணிப்புப்பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் ஏலகிரி மலைக்கு செல்ல அனுமதியில்லை. ஏலகிரி மலைப் பாதையில் ஒரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏலகிரிக்கு வந்துள்ளவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏலகிரி மலையில் வசிப்பவர்கள் மட்டும் பகல் நேரங்களில் வந்து செல்ல அனுமதிப்படுவார்கள். வெளியாட்கள் யாரும் மலையேற அனுமதியில்லை.

அதேபோல, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தனிமனித இடைவெளி,முகக்கவசம், விதிமீறல்களை கண்காணிக்க ரோந்து காவலர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருவோர்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கேயே மருத்துவப் பரிசோத னைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வருவோர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயம் என்பதால் அங்கு கண்காணிப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் என இதுவரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து காவல் துறை சார்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் பொதுமக்கள் எவ்வாறு முழு ஒத்துழைப்பு அளித்தார்களோ? அதேபோல இந்த முறையும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே திருப்பத்தூர் மாவட்டத்தில் கரேனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்’’. என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x