Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM

தாயின் உடல் தகனம் முடிந்தவுடன் பணிக்கு திரும்பிய குஜராத் டாக்டர்கள்

குஜராத் மாநிலம் வடோதராவிலுள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் ஷில்பா படேல். இந்த மருத்துவமனையில் கரோனா வைரஸ் பிரிவில் அவர் பணியாற்றி வருகிறார்.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரது 77 வயதான தாயார் காந்தா அம்பாலால் படேல் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார் டாக்டர் ஷில்பா படேல். சடங்குகள் முடிந்த 6 மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து தொடர்ந்து பணியில் ஈடுபட்டார் அவர்.

இதுகுறித்து டாக்டர் ஷில்பா கூறும்போது, “எனது தாய் உயிரிழக்கும்போது கடைசியாக சில வார்த்தைகளைக் கூறினார். அனைத்தையும் விட உனது கடமைதான் முக்கியம் என்று அப்போது தெரிவித்தார். அவரின் சொல்படி நான் இறுதிச்சடங்குகள் முடிந்த சிறிது நேரத்தில் பணிக்குத் திரும்பிவிட்டேன்" என்றார்.

காந்தி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராகுல் பார்மர். இவரது தாயார் காந்தா பார்மர். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் காந்தா. காந்தி நகரில் ராகுல் வேலை பார்த்து வந்த சென்டிரல் மருத்துவமனையில்தான் இவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த மருத்துவமனையில் கரோனா வைரஸ் பிரிவில் ராகுல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி காந்தா இறந்தார். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாயாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்ற டாக்டர் ராகுல், சில மணி நேரங்களில் பணிக்குத் திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது தாயாரின் மரணம் இயற்கை மரணமாகும். எனது குடும்பத்தாருடன் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று பின்னர்பணிக்குத் திரும்பிவிட்டேன்” என்றார்.

தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் கரோனா வைரஸ் சிகிச்சைப் பணிக்குத் திரும்பிய 2 டாக்டர்கள் குறித்த செய்தி தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x