Published : 20 Apr 2021 03:14 am

Updated : 20 Apr 2021 03:14 am

 

Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

கரோனா தடுப்பு பணியை மேற்கொள்ளாமல் - பிரச்சாரத்தில் ஈடுபடுவதா? : பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை

கரோனாவில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபடாமல் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:


கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் வி.கே.சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் சகோதரருக்கு காசியாபாத் மருத்துவமனையில் இடம் கிடைக்க உதவுங்கள்’ என்று உத்தர பிரதேச மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கும் நிலைமை மோசமடைந்துள்ளது.

தொலைநோக்கு திட்டமிடல் இல்லாத நிலையில் கரோனாவைபாஜக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என தெரியவில்லை. தடுப்பூசி போடுவதில் பாரபட்சமான அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் பேரில் 1,794 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேநாளில் குஜராத் போர்பந்தர் மாவட்டத்தில் 1 லட்சம் பேரில் 25,615 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரதமரின் சொந்தமாநிலம் என்பதால் இந்த சலுகையா?

கரோனா முதல் அலையின்போதே சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருக்க வேண்டும். இந்தியாவில் இன்று 10 ஆயிரம்நோயாளிகளுக்கு 9 மருத்துவமனைகளும், 8 மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் சுகாதார காப்பீட்டை பெறவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகே உற்பத்தி அதிகரிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமது மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரத்து செய்திருக்கிறார். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது கண்டனத்துக்குரியது. கரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் பிரதமர் உடனடியாக ஈடுபடவில்லை எனில் பாஜக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x