Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

நமக்கு கரோனா வராது என்ற அலட்சியம் வேண்டாம் : பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

நமக்கு கரோனா வராது என்று யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவல் 2-வது பேரலையாக பரவத் தொடங்கியுள்ளது. எனவே, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

ஊடரங்கு காலகட்டத்தில் அவசிய பயன்பாட்டுக்கு மட்டுமே வெளியில் வந்து செல்லுங்கள். மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும். ‘நமக்கெல்லாம் கரோனா வராது’ என்பது போன்ற அலட்சியம் எப்போதும், யாருக்கும் இருக்கக் கூடாது.

உடல் நலம், மனநலம் இரண்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஊரடங்கு அறிவித்ததோடு கடமை முடிந்துவிட்டதாக அரசுநினைக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படுக்கை வசதிகள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருத்தல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநில அரசுகளுக்கு மத்திய பாஜக அரசு உதவி செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சூழலையும் அரசுகள் மனதில் வைத்து நலத்திட்ட உதவிகள், நிவாரணங்களை செய்து தர வேண்டும்.

கரோனா மேலும் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காத்தல், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்க்கு உதவுதல் ஆகியமூன்றையும் முக்கியக் கடமைகளாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x