Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் விளாசலில் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஹாட்ரிக் வெற்றி :

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்தது. ஆனால் கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் தங்களது அதிரடியால் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினர். கிளென் மேக்ஸ்வெல் 49 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசிய நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

டி வில்லியர்ஸ் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களுக்கு உறுதுணையாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 28 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கைல் ஜேமிசன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ஷுப்மன் கில் 21, ராகுல் திரிபாதி 25, நித்திஷ் ராணா 18, தினேஷ் கார்த்திக் 2, கேப்டன் இயன் மோர்கன் 29, ஷகிப் அல் ஹசன் 26, பாட் கம்மின்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்ற முயன்ற ஆந்த்ரே ரஸ்ஸல் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களில் நடையை கட்ட கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இந்த சீசனில் இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். அந்த அணி சார்பில் கைல் ஜேமிசன் 3, யுவேந்திர சாஹல் 2, ஹர்ஷால் படேல் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக டி வில்லியர்ஸ் தேர்வானார்.

இன்றைய ஆட்டம்சென்னை - ராஜஸ்தான்

இடம்: மும்பை

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x