Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

செங்குளத்தில் குடிமராமத்து திட்டத்தில் - தரமற்ற முறையில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் புகார் :

குடிமராமத்து திட்டத்தில் செங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தரமற்ற முறையில் செய்யபட்டுள்ளன என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது செங்குளம். திருமூர்த்தி அணை மூலம் பாசனம் பெறும் 7 குளங்களில் இதுவும் ஒன்று. குடிமராமத்து திட்டத்தின் கீழ் செங்குளத்தின் பராமரிப்புக்காக ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதில் தரமற்றகட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: செங்குளத்து தண்ணீரால், குளத்தை ஒட்டிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் பயனடைந்து வருகிறது. குளத்தை தூர் வாருவது மட்டுமே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், விவசாயிகளே சொந்த செலவில் குளத்தில் இருந்து வண்டல் மண் அள்ளிச் சென்றனர்.இதனால் குளம் ஆழப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே குடிமராமத்து திட்டத்தில் 2019-ம் ஆண்டில் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் செய்துள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிறிய அளவில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதுவும் தரமற்ற கட்டுமான பணியால் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு நிதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்ற விவரம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பணிகள் தொடர்பான முழு விவரத்தையும் வெளியிட வேண்டும்’ என்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட துணை தலைவர் எஸ்.பரமசிவம் கூறும்போது, ‘குடிமராமத்து திட்டப் பணிகள் ஒரு சில இடங்களில் பாசன விவசாயிகள் சங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான இடங்களில் பொதுப்பணித்துறையினர், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் தான் பணிகளைச் செய்துள்ளனர். இதன் மூலம் நடைபெற்ற பணிகளின் தரம் மற்றும் இதர புகார்களுக்கு பொதுப்பணித்துறை நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறும்போது, பணியின் தரம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இத்திட்டம் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மூலம் தான் மேற்கொள்ளப் பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x