Last Updated : 19 Apr, 2021 03:16 AM

 

Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

‘ட்ரோன் ' கேமரா மூலம் காட்டுத் தீ, விலங்குகள் நடமாட்டம் கண்காணிப்பு : வனப்பணியாளர்களுக்கு பிரத்யேக பயிற்சி

காட்டுத் தீ, விலங்குகள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் கோவை மண்டல வனப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து 'ட்ரோன்' கேமராக்களை வனத்துறை பயன்படுத்தி வருகிறது.

கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களை உள்ளடக்கிய கோவை வனக் கோட்டம் 711.80 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. வனப்பகுதிக்குள் அனைத்து இடங்களுக்கும் நடந்து சென்று கண்காணிப்பு பணி மேற்கொள்வது சில நேரங்களில் வனப்பணியாளர்களுக்கு சவாலாக உள்ளது. இதற்கு மாற்றாக, தேவையான இடங்களில் ‘ட்ரோன்’ கேமராக்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்தது.

இதற்காக கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனச்சரகங்களில் இருந்து தலா ஒரு வனக்காப்பாளர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ‘ட்ரோன்'களை இயக்கவும், அதன்மூலம் எடுக்கும் படங்கள் மூலம் வரைபடம் உருவாக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை, உதகை, கூடலூர் வனக்கோட்டங்கள், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் தலா ஒரு ட்ரோன் கேமரா வீதம் மொத்தம் 4 ட்ரோன் கேமராக்களை வாங்கியுள்ளனர். இதன்மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர் வனத்துறையினர்.

இதுதொடர்பாக கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் கூறியதாவது:

வனப்பகுதியில் உயரமான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டால் அது எந்த இடத்தை நோக்கிப் பரவுகிறது என்பதை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க முடியும். மேலும், பகல் நேரத்தில் யானைகள் நடமாட்டம், மற்ற விலங்குகள் நடமாட்டத்தை தொலைவில் இருந்து கண்காணிக்கலாம்.

‘ட்ரோன்' கேமரா உதவியுடன் புகைப்படங்கள் எடுத்து வன எல்லைகளை வரையறுக்கலாம். மாநில எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் காடுகளில் பசுமைப் பரப்பு எந்த அளவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளவும் இவற்றை பயன்படுத்தலாம். மனித-விலங்கு மோதல் நடைபெறும் இடங்களில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் செந்தில் குமார் தலைமையில் 20 வனப்பணியாளர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x