Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

நடிப்பாலும் சமூக அக்கறையாலும் மக்களின் மனங்களை வென்றவர் - ‘சின்னக் கலைவாணர்’ நடிகர் விவேக் மறைந்தார் : 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்ரசிகர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி

மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் திரண்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பத்ம விருது பெற்ற பிரபல நடிகர் விவேக் (59), நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருப்பதும், இதயத்தின் இடதுபுற ரத்தநாளத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்து ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உயிர் காக்கும் ‘எக்மோ’ கருவி பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்புக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி தெரிவித்தார்.

மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை 4.35 மணிக்கு விவேக் உயிரிழந்தார்.

இதையடுத்து, விவேக்கின் உடல் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரைத் துறையினர் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை முதலே ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

விவேக்கின் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆணையம் அனு மதி வழங்கிய நிலையில், விவேக் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அரசு அறிவித்தது.

விவேக்கின் உடல் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டில் இருந்து ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர் கள், திரையுலகினர் பங்கேற்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்து கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். மின் மயானத்தில் காவல்துறையினர் 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.

திரைப்படங்களில் நகைச்சுவை யோடு சமூக கருத்துகளையும் கலந்து ரசிகர்களை கவர்ந்தவர் விவேக். சமூக சீர்திருத்த கருத்து களை பேசி நடித்ததால் அனை வராலும் ‘சின்னக் கலைவாணர்’ என அன்புடன் அழைக்கப்பட்டார்.

முதுகலை பட்டதாரி

கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரில் 1961-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதி யினரின் மகனாக பிறந்தவர் விவேக். அவரது முழு பெயர் விவே கானந்தன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலை துறையில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர் வில் வெற்றி பெற்று, தலைமைச் செயலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

மேடை நாடக நடிப்பில் ஆர்வம் கொண்ட விவேக்குக்கு திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. அவரு டைய இயக்கத்தில் 1987-ம் ஆண்டில் ‘மனதில் உறுதி வேண் டும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ என பல படங்களில் நடித்தார். ‘மின்னலே’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘ரன்’ , ‘நம்ம வீட்டு கல்யாணம்’,‘திருநெல்வேலி’, ‘தூள்’, ‘சாமி’ , ‘சிவாஜி’, ‘அந்நியன்’ போன்ற படங்களில் நகைச்சுவையுடன் சமூக சீர்த் திருத்த கருத்துகளை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தார். இதுவரை 220-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இசைத்துறையிலும் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்

சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் விளங்கிய விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதான பற்று காரணமாக பசுமை கலாம் என்ற இயக்கத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் சுமார் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தார்.

விவேக்குக்கு அருள்செல்வி என்ற மனைவியும், அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது மகன் பிரசன்ன குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

விருதுகள்

திரைப்படத் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக இவருக்கு மத்திய அரசு பத்ம விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பில் 4 முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சின்னத்திரையில், ‘மேல்மாடி காலி’ என்ற நகைச்சுவை தொடரில் நடித்திருக்கிறார். இவ ரது நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டில் ‘தாராள பிரபு’ என்ற திரைப்படம் வெளியானது.

பிரதமர், ஆளுநர், முதல்வர் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு: நடிகர் விவேக்கின் மரணம் வேதனை அளிக்கிறது. டைமிங் காமெடி, துள்ளலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி: நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடையச் செய்துள்ளது. அவரது நகைச்சுவை நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர் அவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையடைந்தேன். தனது திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அற்காக எப்போதும் அவர் நினைவு கூரப்படுவார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: நடிகர் விவேக் தனது வாழ்நாள் முழுவதையும் நடிப்பு மற்றும் சமூகப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார். நடிப்பாற்றல் மட்டுமல்லாமல் மனிதாபிமானம், தொழிலில் நேர்மை போன்றவற்றால் மரியாதை, புகழ், அதீத அன்பையும் சம்பாதித்தார். அவரது மறைவு தமிழகத்துக்கு குறிப்பாக திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

முதல்வர் பழனிசாமி: தமிழ்த் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக தனது ஆளுமையை கோலோச்சியவர் விவேக். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர். தனது ஈடு இணையற்ற கலை, சமூக சேவையால் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த விவேக் மறைவு, தமிழ் திரைப்படத் துறையினர், ரசிகர்கள், சமூக ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய இழப்பு.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திரைப்படம் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய விவேக், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகித்தவர். அவரது மறைவு இந்த சமூகத்துக்கும், தமிழ் திரையுலகுக்கும் மிகப்பெரிய இழப்பு.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவ நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த அவரை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x