Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

கரோனா அதிகரித்து வரும் நிலையில் வேளாண் உரங்களின் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில், மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், கோ.பழனிசாமி முன்னாள் எம்.எல்.ஏ. டி.எம்.மூர்த்தி மற்றும் நா.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, முன்பை விடவும் வெகு வேகமாகப் பரவி வருகிறது. அதிக உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால்போதிய தடுப்பூசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவுகிறது. முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கும்கூட இரண்டாவது தவணை ஊசி செலுத்த வேண்டிய நாளை அரசு மருத்துவமனைகள் தள்ளிப்போட்டு வருகின்றன. உடனடியாக போதிய அளவில் தடுப்பூசிகளைத் தருவிக்க தமிழ்நாடு அரசுதுரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால், கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. ஏற்கெனவே அரசு அறிவித்ததைவிட, பல மடங்கு அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக, இலக்கு நிர்ணயித்து அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது அநியாயமானதாகும். ரூ.4 கோடி அபராதம் வசூலித்ததாகக் கூறுவது அரசுக்குப் பெருமிதம் தருவதல்ல. எல்லோருக்கும் அரசாங்கமே முகக்கவசம் வழங்குவதோடு, அபராதக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.

விவசாய இடுபொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு ஏறத்தாழ ரத்து செய்துவிட்டது. இதன் காரணமாக உரங்களின் விலை உயர்ந்துள்ளது. விற்பனை விலை குறைந்து, விவசாய இடுபொருட்களின் விலை அதிகரிக்கும் போது, விவசாயிக்கு பெருநட்டம் ஏற்படும். விவசாயத் தொழிலையே கைவிட நேரும். இது நிலத்தை விட்டு விவசாயியை வெளியேற்றும் சதிச் செயலாகும். எனவே, எல்லை மீறி உயர்ந்துள்ள உரங்களின்விலைகளை, பழைய விலைக்கே குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x