Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிப்பகுதியில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம்: டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் ஆதங்கம்

மும்பை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிப் போட்டியில் எங்களை மீற அனுமதித்துவிட்டோம் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆதங்கப்பட்டார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி டேவிட் மில்லர் விளாசிய 62 ரன்கள் மற்றும் இறுதிக்கட்டத்தில் கிறிஸ் மோரிஸ் விளாசிய 36 ரன்களால் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

டேவிட் மில்லர் களமிறங்கிய போது ராஜஸ்தான் அணி 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து பரிதவித்தது. அங்கிருந்து அணியை வெற்றியை நோக்கி இழுத்துச் சென்றார் டேவிட் மில்லர்.அதேவேளையில் கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் காகிசோ ராபாடாவின் 19வது ஓவரிலும், டாம் கரணின் கடைசி ஓவரிலும் தலா 2 சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு பெரிதும் பங்களிப்பு செய்தார் கிறிஸ் மோரிஸ்.

இறுதிக்கட்ட ஓவர்களில் ரிஷப் பந்த் மேற்கொண்ட சில தவறான வியூகங்களால் டெல்லி அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. அஸ்வின் 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த நிலையில் அவருக்கு முழு ஓவர்களை வழங்காமல் 13வது ஓவரிலேயே ஸ்டாயினிஸை கொண்டு வந்தார் ரிஷப் பந்த். இந்த ஓவரில் 15 ரன்கள் விளாசப்பட்டது. இதன் பின்னர் கடைசி வரை அஸ்வினுக்கு ஓவர் வழங்கப்படவில்லை. ஒருவேளை அஸ்வினுக்கு எஞ்சிய ஒரு ஓவரையும் வழங்கியிருந்தால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் இருந்திருக்கக்கூடும்.

போட்டி முடிவடைந்ததும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்பந்த் கூறும்போது, “பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பான பணியை செய்தார்கள். ஆனால்இறுதிக்கட்டத்தில் ராஜஸ்தான் அணி எங்களை மீற அனுமதித்தோம். நாங்கள் சற்று சிறப்பாக பந்துவீசியிருக்க வேண்டும். இது விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் இறுதிப்பகுதியில் பனிப்பொழிவு பெரிய பங்குவகித்தது. பேட்டிங்கில் நாங்கள் 15 முதல் 20 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். ஆனால் இந்த ஆட்டத்தில் இருந்து சில ஆதாயம் அடைந்துள்ளோம், பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x