Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் - கண்டிப்பாக நிபுணர்களாக இருக்க வேண்டும் : உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் கண்டிப்பாக நிபுணர்களாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜாவைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ‘பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக பணிபுரிய, விதிகளின்படி 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறைசார்ந்த பணிகளில் போதிய அனுபவம் இருக்க வேண்டும். ஆனால்,கிரிஜா வைத்தியநாதனுக்கு 3ஆண்டு, 6 மாதம் மட்டுமே சுற்றுச்சூழல் துறை சார்ந்த அனுபவம் உள்ளது. எனவே, அவரது நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடைவிதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், ‘‘வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் தொடர்பான விவகாரங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு போதுமான நிபுணத்துவம் இல்லை என்பதாலேயே பசுமைதீர்ப்பாயம் போன்ற தீர்ப்பாயங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆனால், தற்போது அந்த தீர்ப்பாயங்களில் போதிய நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், கண்டிப்பாக நிபுணர்களாக இருக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்’’ என கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், ‘‘தீர்ப்பாய விதிகளின்படி சுற்றுச்சூழல் துறை சார்ந்த படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25ஆண்டு இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 20 ஆண்டுகால நிர்வாக அனுபவத்தில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசுநிறுவனங்களில் நிர்வாக கட்டுப்பாடு ஐஏஎஸ் அதிகாரிகளின் கையில்தான் உள்ளது’’ என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x