Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் : காவல்துறை துணை ஆணையர் வலியுறுத்தல்

கரோனா பரவல் தடுப்பு வழிமுறை களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்களை காவல் துணை ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாநகர காவல்துறைக் குட்பட்ட கடைவீதி காவல்துறை நிர்வாகத்தின் சார்பில், கரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் கடைவீதி காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மேற்கு உட்கோட்ட உதவி ஆணையர் திருமேனி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ஸ்டாலின் பேசும்போது, ‘‘அரசு அறிவித்துள்ள கரோனா கால நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தங்களது செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்கள் முகக்கவ சம் அணிந்து இருத்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறை களை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அவர்களது உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும், மதுபானம் அருந்துவதற்கும், பான், குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் உள்ளூர் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசால் கரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் பெரிய அளவில் தொடங்கப்பட்டு, நடந்து வருகிறது. தற்போதைய சூழலில், கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது அவசியமாகிறது. எனவே, அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நெரிசலான இடங்களான வார சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுப்போக்குவரத்துப் பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க, கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.

இக்கூட்டத்தில் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ, கடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள், சங்கத்தினர், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x