Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் - அனைத்து செங்கல் சூளைகளையும் மூட வேண்டும் : தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில்சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து செங்கல் சூளைகளையும் மூட வேண்டும் என, தமிழக தலைமைச் செயலருக்கு அனுப் பியுள்ள கடிதத்தில் தமிழக விவ சாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் வி.வேணுகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தடாகம், சுற்றுவட்டாரப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சட்டவிரோ தமான செங்கல் சூளைகளின் நடவடிக்கைகளால் அப்பகுதியில் விவசாய நிலம், வினோபா தான பூமி, பஞ்சமி நிலம், கோயில் நிலம், வருவாய்துறைக்கு சொந்தமான நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்ககள், மலையடிவார விளைநிலங்கள் என சுமார் 9,500 ஏக்கருக்கு மேல் 50 அடி ஆழம் முதல் 130 அடிவரை வளம்மிக்க செம்மண், களிமண், வண்டல் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செங்கல் சூளையிலும் அரசு விதிகளைமீறி, செம்மண் குவியல் குவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யிலும், மாவட்ட ஆட்சியரின் மார்ச் 19-ம் தேதி ஆணைப்படியும் 186 செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு, அவற்றின் மின் இணைப்புகள் துண்டிக் கப்பட்டுள்ளன. ஆனால், அப்பகுதியில் சில செங்கல் சூளைகள் விடுபட்டுள்ளன.

எண்.23 சின்ன தடாகம், 24 வீரபாண்டி, 22 நஞ்சுண்டாபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் விதிமீறி செயல்படும் செங்கல்சூளைகளை மூடவும், மின் இணைப்பைத் துண்டிக்கவும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை.

தடைவிதிக்கப்பட்ட செங்கல் சூளைகளில் தொழிலாளர் குடியிருப்பு மின் இணைப்புகள், அலுவலக மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. அந்த மின் இணைப்புகளைப் பயன்படுத்தி இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிவரை செங்கற்களை உற்பத்தி செய்கின்றனர். அவற்றை டிப்பர் லாரிகள் மூலம் ஏற்றி வெளிச்சந்தைகளுக்கு சட்டவிரோ தமாக எடுத்துச் செல்கின்றனர்.

ஒவ்வொரு செங்கல் சூளையிலும் விதிமீறி இருப்பு வைக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான யூனிட் செம்மண்ணை இயந்திரங் களை கொண்டு சமன் செய்து வருகின்றனர்.

பல்வேறு முறை கனிம வளத்துறை இணை இயக்குநர், உதவி இயக்குநர், கோவை வடக்கு கோட்டாட்சியர், சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள், கோவை வடக்கு வட்டாட்சியர், துடியலூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய அளவில் கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடங்களையும், விதிமீறி குவித்து வைக்கப்பட்டுள்ள செம்மண் குவியல்களை மதிப்பீடு செய்து உரிய அபராதம் விதிப்பதோடு, சிறு கனிம விதிகளின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்வழிப்பாதைகளை மீட்டு கவுசிகா நதி, சங்கனூர் ஓடைஆகியவற்றின் மூலம் மழைக்கா லங்களில் நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x