Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

அம்பேத்கர் 130-வது பிறந்தநாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை :

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 130-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப் பட்டது.

மு.க.ஸ்டாலின் மரியாதை

இதையொட்டி, சென்னை கோயம்பேடு பகுதியில் மாநில தேர்தல் ஆணையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருமுல்லைவாயல் பகுதி யில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கமலாலயத்தில் விழா

சென்னை தியாராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரான சு.திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரும் கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜய காந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னை துறைமுகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ளதமாகா அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு கட்சித் தலைவர்ஜி.கே.வாசன் மாலை அணிவித்தார். தியாகராய நகரில் உள்ள சமக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாநிலபொருளாளர் ஏ.என்.சுந்தரேசன்மாலை அணிவித்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்கலைக்கழக அலுவலர்கள், ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x