Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு - தாமதமின்றி சம்பளம் வழங்க : தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை :

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில்தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட9 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

போக்குவரத்து தொழிலாளர்களின் தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, தேசிய மற்றும் பண்டிகை விடுப்பு என அனைத்து விடுப்பு குறித்தும் ஊதிய ஒப்பந்தங்களின்போது பேசி ஒருமித்த கருத்தோடு விடுப்பு வசதிகளை நிர்ணயித்து வருகிறோம். அவ்வாறு இறுதி செய்யப்பட்ட விதிகள் தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் எவ்வித அறிவிப்பும் இன்றி விடுப்பு வசதிகளை மாற்றியமைத்து நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதாக அறிகிறோம்.

தற்செயல் விடுப்பு 12 நாட்கள் என்பதை 14 நாட்களாக கணக்கிட்டு காட்டி இருக்கிறார்கள். அதாவது, தற்செயல் விடுப்பு உயர்த்தப்படவில்லை. ஆனால், ஒப்பந்தத்தின்படி தேசிய மற்றும் பண்டிகை விடுப்பில் கூடுதலாக இருக்கும் விருப்ப பண்டிகை விடுப்பில் 2 நாட்களை தற்செயல் விடுப்போடு இணைத்துள்ளனர். இது, உள்ளூர் அல்லது வட்டார பண்டிகை நாட்களில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட விடுப்பாகும். இது தொழிலாளர்களின் விருப்ப விடுப்பாகும். இதை தற்செயல் விடுப்பாக மாற்றக்கூடாது. இது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம்ஆகிய போக்குவரத்து கழகங்களில்மாதத்தின் இறுதி நாளிலும், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம் கோவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் மாதத்தின் முதல் நாளிலும் சம்பளம் வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. மாதத்தின் இறுதி நாளோ அல்லது முதல் நாளோ விடுமுறை தினமாக இருந்தால் விடுமுறைக்கு முன்பே ஊதியம் வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

தற்போது ஊதியம் வழங்குவது என்பது கழகங்கள் விரும்பியதினங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பளம் வழங்குவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஊதிய சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கு தாமதமின்றி சம்பளம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x