Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல் - தமிழகத்தில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது : ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்புஎண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 4,203, பெண்கள் 2,781 என மொத்தம் 6,984 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இங்கிலாந்து, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பிஹார், ஜார்க்கண்ட், கேரளா,ராஜஸ்தான், கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து வந்த 26 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,482, செங்கல்பட்டில் 771, கோவையில் 504 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 46,004 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 84,199 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று சென்னையில் 853 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3,289பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 49,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,945 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சகாயத்துக்கு தீவிர சிகிச்சை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தின் ‘சகாயம் அரசியல் பேரவை’ அமைப்பு சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்காக தீவிர பிரச்சாரம் செய்த சகாயம், கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒருவாரமாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சகாயம் உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்புகுறித்து கேட்டதற்கு சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘‘தேவையில்லாத பயணங்கள், கூட்டங்களை தவிர்க்க வேண்டும். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது. இந்திய அளவில் கரோனா பெரும் சவாலாக உள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது’’ என்றார்.

மருத்துவர்கள் நியமனம்

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.

10 முதல் 14 நாளில்..

தேசிய தொற்றுநோய் நிலையதுணை இயக்குரும், தமிழக மருத்துவ நிபுணர் குழு உறுப்பினருமான பிரப்தீப் கவுர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் ஒரேநாள் கரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரமாக இருந்தது. அந்தஎண்ணிக்கை தற்போது தாண்டிவிட்டது. 2,100-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன்வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும். உயிரிழப்பும் அதிகரிக்க நேரிடும்.வீடு, அலுவலகங்களில் கூட்டமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டாம். சில மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட வேண்டாம். கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் 10 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x