Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM

திருச்சி மாவட்டத்தில் இதுவரை - 1.41 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி : ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தகவல்

திருச்சி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையம், கரோனா சிகிச்சை முன்னேற்பாடு பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சி அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. தேவைப்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதுமட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1.41 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் மட்டும் 91 ஆயிரம் பேர்.

மக்கள் தாங்களாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அதிகரித்துள்ளதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஓரிரு நாட்களில் மேலும் கரோனா தடுப்பூசிகள் திருச்சி மாவட்டத்துக்கு கொண்டு வரப்படவுள்ளன.

ஒரு இடத்தில் 3 பேருக்கு அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்த இடம் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி, திருச்சி மாநகரில் 11 இடங்கள் உட்பட மாவட்டத்தில் தற்போது 14 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் 4,000 முதல் 4,500 வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளையில், குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x