Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

இதுவரை தாய், தாய்நாடு, மக்கள் என முழங்கியவர் - மோடி, மோடி, மோடி என முழங்குகிறார் மம்தா : மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

மேற்கு வங்கத்தில், தாய், தாய்நாடு, மக்கள் என்ற முழக்கத்துடன் ஆட்சி செய்து வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது மோடி, மோடி, மோடி என முழங்குவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பர்த்மான் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, தாய், தாய்நாடு, மக்கள் என்ற முழக்கத்துடன் ஆட்சிசெய்து வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி, மோடி, மோடி என முழங்குகிறார்.

சகோதரி மம்தா, நிர்வாகம் என்ற பெயரில் மாநிலத்தை சீர்குலைத்துள்ளார். பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் துரத்தப்படுவார்கள் என மம்தாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற மொழியை, ஆணவப் போக்கை மக்கள் ஏற்பார்களா? இது ஜனநாயகமா?

சகோதரியே, உங்களுடைய கோபத்தை இறக்கி வைக்க விரும்பினால், நான் இருக்கிறேன். உங்களால் முடிந்தவரை என்னைவசைபாடுங்கள். ஆனால் வங்கத்தின் கண்ணியம், பாரம்பரியத்தை அவமதிக்காதீர்கள். உங்கள் ஆணவப் போக்கையும் மிரட்டலையும் மக்கள் சகித்துக்கொள்ளமாட்டார்கள். மக்கள் இப்போது உண்மையான மாற்றத்தை விரும்புகிறார்கள்.

மம்தாவின் ஆதரவாளர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திரை வசைபாடுவதுடன் அவர்களை பிச்சைக்காரர்கள் என கூறுகின்றனர். இந்தவார்த்தையைக் கேட்டால் பாபா சாஹிப் அம்பேத்கர் ஆன்மா புண்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x