Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்காக - ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கரோனா தடுப்பூசிக்கு அனுமதி : 10 கோடி டோஸ்கள் இறக்குமதி செய்ய முடிவு

அவசரகால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' கரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து 'கோவேக்ஸின்' என்ற கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன.

கோவிஷீல்டு, கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஜனவரியில் அனுமதி வழங்கியது. கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த 2 கரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து மாதந்தோறும் 4 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 7 கோடி கரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.

இதை கருத்தில்கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) சிறப்பு நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ), ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என்று தெரிகிறது.

ரஷ்ய அரசு நிறுவனமான கமலேயா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ள 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் இதுவரை 59 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய 2, 3-வது கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

இதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸுடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் சார்பில் இந்தியாவில் 3-ம் கட்ட 'ஸ்புட்னிக் வி' பரிசோதனை வெற்றி கரமாக நிறைவு பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந் தத்தின்படி 10 கோடி 'ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இந்தியா வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவை இறக்குமதி செய்யப்படுவதால் ஒரு தடுப்பூசியின் விலை ரூ.700 ஆக இருக்கும். இதன்பிறகு இந்தியாவில் ‘ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய் யப்படும்போது விலை கணிசமாக குறையும் என்று மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

91.6 சதவீதம் அளவுக்கு பலன் அளிக்கும்

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு தடுப்பூசி 80 சதவீதம் அளவுக்கும் கோவேக்ஸின் தடுப்பூசி 81 சதவீதம் அளவுக்கும் பலன் அளிக்கிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி 91.6 சதவீதம் அளவுக்கு பலன் அளிக்கும் என்பது சர்வதேச ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை சேமித்து வைப்பதும், எடுத்துச் செல்வதும் எளிது.

இந்தியாவில் தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள பயோ-இ, நோவேக்ஸ், ஜைடஸ் கேடிலா, இன்ட்ராநேசல் ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கும் அடுத்தடுத்து அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x