Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

தடுப்பூசி போட ஆதார் அட்டை கட்டாயம் இல்லை - 1.10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கைவசம் உள்ளது : புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 1. 10 லட்சம் பேருக்கு மேல் போட கரோனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரையில் தடுப்பூசி போட்ட யாருக்கும், எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே, மக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதுஉள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் நேற்று துணை நிலை ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய தலைமை செயலாளர் அஸ்வனி குமார், " கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மேலும் 1 லட்சம் தடுப்பூசி புதுச்சேரிக்கு வந்துள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, "தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளில் 7,271 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. தேவையான அளவு தடுப்பூசி புதுச்சேரியில் உள்ளது. தற்போது 1.10 லட்சம் பேருக்கு மேல் தேவையான தடுப்பூசி புதுச்சேரியில் உள்ளது.முகக்கவசம் போடாவிட்டால் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். அணியாதோருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களுக்கு முகக்கவசம் தர வேண்டும் என்றும்அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் காப்பீடு

அட்டை விநியோகம்

முன்னதாக இரண்டாவது நாள் கரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசைப் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், "கரோனா தடுப்புப் பணியில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தடுப்பூசி போடும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினர் கண்டறியப்பட்டு, இந்த முகாம்களிலேயே அவர்களுக்கு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகள் வழங்கப்படுகின்றன." என்று தெரிவித்தார். ஆதார் மட்டுமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. தேவைப்படின் தனியான கோவிட் மையங்கள் அமைக்கப்படும்.

மக்கள் அச்சப்படாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

கரோனா நெருக்கடி நிலையில், நாள்பட்ட நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தரவும், தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மருந்துகள் தரவும் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தொலைபேசி வாயிலாக பேசி தீர்வு காணவும் முடிவெடுத்துள்ளோம். ஜிப்மர் மருத்துவமனையிலும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவோருக்காக மருந்து மாத்திரைகள் சிகிச்சையை புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழக மக்களும் பெறுவதால் அதை தொடர அந்நிர்வாகத்திடம் பேச உள்ளோம்" என்று தெரிவித்தார். இதற்கிடையே, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா தடுப்பூசி போட வருவோர் ஆதார் அட்டை மட்டுமில்லாமல் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டியும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

மக்கள் அதிகம் கூடும் மீன், காய்கறி மார்க்கெட், வணிக நிறுவனங்கள் ஆகிய இடங்களுக்கு வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கடைக்காரர்கள், விற்பனையாளர்கள், கடைகளில் பணிபுரிவோரும் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் 6 அடி இடைவெளி விட்டு நிற்க அடையாளக் குறிகளை வரைந்து வைக்க வேண்டும். மார்க்கெட், கடைகளில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x