Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் - கரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிகிச்சைக்கு 1,050 படுக்கை வசதிகள் : கண்காணிப்பு அலுவலர் சி.முனியநாதன் தகவல்

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிகிச்சைக்கு நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,050 படுக்கை வசதிகள் உள்ளன என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி.முனியநாதன் தெரிவித்துள்ளார்.

நாகையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையரும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலருமான சி.முனியநாதன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உடனிருந்தார்.

பின்னர், கண்காணிப்பு அலுவலர் சி.முனியநாதன் கூறியது:

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தற்போது 895 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 338 பேர், அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 36,600 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக 580 படுக்கை வசதிகள், மயிலாடுதுறையில் 470 படுக்கை வசதிகள் என மொத்தம் 1,050 படுக்கை வசதிகள் உள்ளன. பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவது, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மாரியப்பன், பணிமனை மேலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x